சீனாவில் வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை – துப்பு கொடுப்போருக்கு பணப்பரிசு

355 0

சீனாவில் வெளிநாட்டு உளவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு பணப்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் ஜின்பிங் தலைமையிலான அரசு பதவியேற்றது முதலே தேச பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்கள் இயற்றியும், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. சீனாவில் வெளிநாட்டு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு அரசு சாரா அமைப்புகளை நிர்வகிக்க கடந்த 2014-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

இத்தகைய வெளிநாட்டு ஆதிக்கத்துக்கு எதிரான முயற்சிகளில் மற்றுமொரு நடவடிக்கையாக தற்போது வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெளிநாட்டு உளவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு பணப்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 1,500 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) முதல் 73 ஆயிரம் டாலர் வரை பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பீஜிங் நகர தேசிய பாதுகாப்பு அமைப்பு, உளவுக்கு எதிரான நடவடிக்கைகளில் குடிமக்கள் ஈடுபட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து உள்ளது.

சீனாவின் சீர்திருத்த நடவடிக்கைகளில் வெளிநாட்டு உளவு அமைப்புகளால் துரதிர்ஷ்டவசமான பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும், அரசியல் ஊடுருவல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த அமைப்புகள் சீனாவின் வாய்ப்புகளை நாசப்படுத்தி வருவதாகவும் அந்த நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.