சென்னை மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமரா அமைப்பு

278 0

தெற்கு ரெயில்வேயில் முதன்முறையாக சென்னை மூர்மார்கெட்- திருவள்ளூர் இடையே இயக்கப்பட்ட மின்சார ரெயிலில் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் முதன்முறையாக சென்னை மூர்மார்கெட்- திருவள்ளூர் இடையே இயக்கப்பட்ட மின்சார ரெயிலில் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனை சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா பார்வையிட்டார்.

குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் போலீசாருக்கு பெரும் துணையாக இருப்பது கண்காணிப்பு கேமராக்கள் ஆகும். கேமராக்கள் இல்லாததால் பல குற்றங்கள் கண்டுபிடிக்க முடியாமல் பல வழக்குகளில் போலீசார் திணறி வருகின்றனர்.

கடந்த வருடம் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டார். அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு தாமதம் ஏற்பட்டது.இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்பின்னர் தெற்கு ரெயில்வேயில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நிர்பயா நிதியில் இருந்து தொகை ஒதுக்கப்பட்டது.ஆனாலும் பாதிக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் இதுவரை கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.700 கோடியை ஒதுக்கியது.

இதனை தொடர்ந்து தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக தற்போது மின்சார ரெயிலில் உள்ள மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொதுவாக ஒரு மின்சார ரெயிலில் 2 மகளிர் பெட்டி இருக்கும். அங்கு தலா ஒரு பெட்டிக்கு 4 கேமராக்கள் வீதம் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ‘மெமரி கார்டுகளில்’ சேமித்து வைக்கப்படும். ஒரு முறை பதிவான காட்சிகள் 22 நாட்களுக்கு அந்த கார்டுகளில் இருக்கும்.

அதன்பின்னர் அந்த பழைய காட்சிகள் அழிந்து புதியதாக பதிவாகும் காட்சிகள் பதிவாகும். இந்த பெட்டியில் யார் ஏறினாலும் 3 கேமராக்களில் அவர்களின் உருவம் பதிவாகும் படி பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கேமரா பழுதானாலும் மற்ற 2 கேமராக்களில் அவர்கள் முகம் பதிவாக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட மின்சார ரெயில் முதன்முதலாக நேற்று சென்னை மூர்மார்கெட்-திருவள்ளூர் இடையே இயக்கப்பட்டது.கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட அந்த மகளிர் பெட்டிகளை சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து மின்சார ரெயில்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் பெட்டியில் கேமராக்கள் பொருத்தும் பணி ஆவடி அன்னனூரில் உள்ள ரெயில்வே பணிமணையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த கோமதி(வயது 25) என்ற தனியார் நிறுவன பெண் ஊழியர் கூறும்போது,

வாரத்தில் 2 நாட்கள் ரெயிலில் குற்ற சம்பவங்கள் நடந்து விடும். தற்போது பெட்டியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது.ரெயிலில் பொருத்தப்பட்ட கேமராக்களை அப்படியே விட்டுவிடாமல் அது செயல்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணித்து, பழுதடையாமல் ரெயில்வே நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.