உரிய சூழ்நிலை உருவாகும் வரை ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையகம்

312 0

தேர்தலை நடத்துவதற்கான உரிய சூழ்நிலை உருவாகும் வரை சென்னை சட்டமன்ற தொகுதியான ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவை அடுத்து வெற்றிடமான ஆர்.கே. நகர் தொகுதியின் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற விருந்தது.

256 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்;பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையாளர் நேற்று இரவு அறிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சசிகலா சார்பாக செயற்படும் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் 89 கோடி ரூபாவினை வாக்காளர்களுக்கு வழங்கியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெறுமதியான பல பரிசுப் பொருட்களும் வாக்காளர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.கே. நகர தொகுதியில் சசிகலா தரப்பில் போட்டியிடவிருந்த தினகரன், தமிழக முதல்வர் பழனிசுவாமி உட்பட சில அமைச்சர்கள் ஊடாக ஒவ்வொரு வாக்காளருக்கும் 4 ஆயிரம் ரூபா வரை கையூட்டலாக வழங்க முன்வந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு தற்போது நேர்மையான முறையிலும் சுதந்திரமான தன்மையிலும் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இடைத் தேர்தல் ரத்தான நிலையில், தேர்தல் தொகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளன.

விசேட காவல்துறையினருடன், இராணுவத்தினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என நான்கு வருட கால சிறைத்தண்டனை பெற்றுள்ள, சசிகலாவிற்கு கட்சியின் இடைக்கால பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது தொடர்பான நம்பகத்தன்மை குறித்து மேலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.