சட்டவிரோத கடற்றொழிலை ஊக்குவிக்கும் இலங்கை அரசு: ரவிகரன் ஆதங்கம்

64 0

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை ஊக்குவிக்கும் நாடாக இலங்கை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்  தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(18.04.2024) கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டவரைபு தொடர்பிலான கருத்தமர்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழில் சட்டவரைபு ஒன்றினை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நேற்று மன்னாரிலும் இன்று முல்லைத்தீவிலும் நாளை யாழிலும் செய்யவுள்ளார்கள்.

இந்த சட்டமூலத்தில் சில திருத்தங்கள் தொடர்பிலான கருத்துக்களை நாங்கள் தெரிவிக்கலாம். அதற்கான விளக்கங்கள் வழங்கப்படும் என்ற இந்த நிகழ்வில் நல்ல பல கருத்துக்கள் திருத்தங்கள் வேண்டும் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டது.

இந்த சட்டமூலங்கள் கருத்துக்கள் சரியாக இருந்தாலும் நடைமுறையில் முல்லைத்தீவில் இது சாத்தியமா? என்பது கேள்விக்குறியே.

சுருக்குவலை தடைசெய்யப்பட்ட தொழில் என்று சட்டமூலம் சுட்டிக்காட்டி நிக்கின்றது. ஆனால் வடபகுதி கடல் முழுக்க சுருக்குவலை உள்ளிட்ட பல சட்டவிரோத தொழில்கள் குவிந்து கிடக்கின்றன.

அதனை பிடிக்கவேண்டிய ஆட்கள் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் தான் பொலிஸாரையோ கடற்படையினரை அழைத்து பிடிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆனால் அது ஒன்றும் செய்வதில்லை சாதராண கடற்றொழிலாளர்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படும் நிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது.

வடக்கில் இவ்வாறான சட்டவிரோத தொழில்களை கட்படுத்தவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் சரியான முறையில் சட்டங்களை கையில் எடுத்து நடைமுறைப்படுத்தும் நிலைக்கும் வரவேண்டும்.

அவ்வாறு வந்தால்தான் சரியான முறையில் தொழில்செய்யமுடியும்.

இந்திய இழுவைப்படகு வந்தால் அறுகால் கடற்படையினர் செல்வதை நாங்கள் காண்கின்றோம். இப்படி இருக்கும் போது சட்டவிரோத தொழில் நடவடிக்கையினை ஊக்குவிக்க செய்யும் நாடாகத்தான் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலை தொடர்ந்தால் எங்கள் கடலில் ஒன்றும் இருக்காது” என்றார்.