மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-60 ஆண்டுகளாக பொள்ளாச்சிக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
தமிழகத்தில் மொத்தமே நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. அதில் பொள்ளாச்சியில் மட்டுமே இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன.விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி.
இப்படி விவசாயிகளுக்காக செய்வது தான் திராவிட மாடல். ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது.இலவச மின்சாரம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 10 ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது. விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு. ஆகவே எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
நல்லதை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.திராவிட மாடல் என்பது பெண்களுக்கானது. உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன், புதுமை பெண் திட்டம் எல்லாம் உங்களுக்கானது. ஆனால் பெண்களுக்கான அரசாக மத்திய அரசு இல்லை. விவசாயிகளுக்காக பல நன்மைகளை செய்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசா அல்லது விவசாயிகளை விரோதிகள் போல பார்க்கும் மத்திய அரசா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. அரசு மக்களுக்காக வேலை செய்யும் அரசு.நாட்டுக்கு நல்லது செய்யும் அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்,
பொய்யாமொழி புலவரை பற்றி பேசி விட்டால் நீங்கள் பேசுவது எல்லாம் மெய்யாகி விடாதே. இந்த பொய் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.