பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம்

60 0

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆழமாகச் சிந்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் , கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்   தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீண்ட காலமாக அமைதி காத்துவந்திருந்த அவர் மு.கா.வின் நிலைப்பாடுகள் மற்றும் நகர்வுகள் குறித்து மௌனம் கலைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும், ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மைக் கட்சி என்ற வகையில் இந்த தேர்தலில் காத்திரமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எமக்குள்ளது.

அந்த வகையில், நாங்கள் சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் கள ஆய்வுகளை ஆழமாக அவதானித்து வருகின்றோம். இவ்விதமான தொடர்ச்சியான அவதானங்களின் அடிப்படையில் எமது இறுதியான நிலைப்பாட்டினை எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதங்களில் வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அதேநேரம், நாம் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் பங்காளியாக உள்ளோம். அவ்வாறு இருக்கின்றபோதும், தென்னிலங்கை தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டியொன்று ஏற்படும் பட்சத்தில் வரப்போகின்ற விளைவுகள் பற்றி நாம் தீவிரமாகக் கவனம் செலுத்தியுள்ளோம்.

குறிப்பாக, வேட்பாளரின் வெற்றிவாய்ப்புக்கள் குறித்து நாம் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் தொடர்ச்சியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அது தொடர்பில் மூடிய அறைப் பேச்சுக்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அப்பேச்சுவார்த்தைகள் தற்போது வரையில் இறுதியான கட்டத்தினை அடையவில்லை. ஆகவே அவற்றின் இறுதியான முடிவுகளும் எமது தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தவுள்ளன.

அதேநேரம், எம்மைப் பொறுத்தவரையில் தனிநபரின் வெற்றியை மையப்படுத்தியோ அல்லது அடுத்த ஆறுவருடங்களுக்குத் தனிநபர் ஒருவரிடத்தில் அதிகாரத்தைக் கையளிக்கும் வகையில் தீர்மானங்களை எடுக்க முடியாது.

அதற்கு அடுத்தபடியாக நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கும் நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது வரையிலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுகின்ற நபர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியோ அல்லது அக்கட்சி சார்ந்த கூட்டணியோ தான் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைத்து வந்திருந்தமை வரலாறாக உள்ளது.

ஆகவே, அதற்கு மாறாக அரசியலில் நிகழ்வுகள் இடம்பெறும் என்று அதீதமான நம்பிக்கையைக் கொள்ளவும் முடியாது. அதேநேரம், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி வேட்பாளரும்ரூபவ் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற ஆட்சியும் அமையவேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகின்றது.

ஏற்கனவே சிறுபான்மை தேசிய இனங்களின் பல்வேறு விடயங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. விசேடமாகக் கூறுவதாக இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகம் மீது பாரபட்சம் காண்பிக்கப்பட்டது. பழிவாங்கல்களுக்குள் உள்ளாக்கப்பட்டது.

ஆனால் தற்போது குறித்த மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் பிறிதொரு சதிவலையும், சக்தியும் உள்ளதாக அம்பலமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுபற்றிய விசாரணைகள் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை.

குறித்த விடயம் சம்பந்தமாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டு, விசேட ஆணைக்குழுவின் மூலமாகச் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சந்தேகப் பார்வை களையப்பட வேண்டும்.

அதேபோன்று, நாட்டின் பொருளாதார விடயமும் மிகவும் முக்கியமானது. சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடுகளைப் பின்னர் மீளத் திருத்தம் செய்ய முடியாது. ஆகவே அந்த உடன்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தினை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக, தற்போது அரசியல் இலாபத்துக்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பயன்படுத்தியதன் பின்னர் மீண்டும் பொதுமக்களை நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட முடியாது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் தொகையிற்கு அப்பால் நாட்டின் நிலைமைகளை மாற்றவல்ல நிதியுதவிகளையும், உள்நாட்டு மேம்பாட்டையும் காண்பதற்கான வழிகள் கண்டறியப்பட வேண்டும்.

இவ்விதமான விடயங்களையெல்லாம் வெளிப்படைத்தன்மையுடன் கையாளக்கூடிய தலைமையும் நாட்டுக்கு அவசியமாகின்றது. ஆகவே, சரியான நேரத்தில் பொருத்தமான முடிவுகள் அவசியமாகின்றது. அவற்றை நாம் முறையாக வெளிப்படுத்துவோம் என்றார்.