ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பே இல்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

70 0

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை சிலிண்டர் விலை குறைந்து காணப்பட்டது.

ஆனால் 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தற்போது தேர்தல் வந்து விட்டதால் ரூ.100 குறைத்து விட்டு நாடகமாடுகிறார்கள். இதனை நீங்கள் நம்ப வேண்டாம். டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரித்து விட்டது.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு தரப்படும்.

பெட்ரோல் 65 ரூபாய்க்கு தரப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். அவர் சொன்னதை செய்து காட்டுவார்.நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.35 ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள், சுற்றுலா தல வழித்தடங்கள், இந்தியா சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் மேம்படுத்தப்படும்.மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிய அகல ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும்.

நீலகிரியில் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைந்து தொடங்கப்படும்.இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற நீங்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் போடுகிற ஓட்டு தான், மோடிக்கு வைக்கிற வேட்டு.தமிழ்நாட்டிற்கு இதுவரை பிரதமர் மோடி ஏதாவது கொடுத்துள்ளாரா? சென்னை, நெல்லை, தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்தரா? வரவில்லை. பேரிடர் பாதிப்புக்கு எந்த நிதியும் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் வந்தவுடன் அடிக்கடி தமிழகத்திற்கு வருகின்றனர்.

தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தி.மு.க. போராடி வருகிறது. அதற்காக தான் இந்த தேர்தல்.இப்போது பா.ஜ.க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரப்போவதாக கூறுகிறார்கள். அது நடைமுறையில் சாத்தியம் இல்லை.ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.

அவர் மறைவுக்கு பிறகான அ.தி.மு.க. ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தேர்வு காரணமாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 22 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வந்து தமிழக கல்வி உரிமையையும் பறித்து விட்டனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி உரிமை, பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று இந்தியாவில் முதல் முறையாக சட்டம் இயற்றியவர் கருணாநிதி.அவரின் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரும் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் திட்டம், பெண்களுக்கான இலவச பயணம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தை பார்த்து தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கனடா நாட்டிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மகளிர் உரிமை திட்டம் கொண்டு வரப்பட்டு, மகளிருக்கு மாதம், மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். தேர்தல் முடிந்த 6 மாதத்தில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கண்டிப்பாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.