தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இன்று ஈடுபட்டுள்ளது.
இதற்காக ஹற்றன் நகரில் மக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
2 வருட ஒப்பந்தகாலம் என்ற ரீதியிலேயே புதிய சம்பள ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சம்பள திட்டமொன்றை கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டின் இறுதியில் 19 மாதங்களின் பின்னர் புதிய சம்பள திட்டம் ஒன்றிற்காக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதால் கூட்டு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதிய ஒப்பந்தம் என்ற சரத்து வலுவற்றுப் போயுள்ளதால் 2019 ஆம் ஆண்டுவரை தற்போதுள்ள சம்பளத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது.
எனவே, இம்மாத இறுதிக்குள் புதிய சம்பளத் திட்டம் ஒன்றிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ய இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இதன்போது தெரிவித்தது.