வடக்கு மாகாண அமைச்சர்களின் முன்னேற்ற நிலமை தொடர்பில் விவாதிப்பதற்கு இரு நாட்கள் விசேட அமர்வு ஒன்றை ஏற்படுத்தி தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா , ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேரவைத் தலைவரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட மாகாணத்தின் 5 அமைச்சுக்களினாலும் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஓர் பகிரங்க விவாதம் இடம்பெறும் வகையில் இரு நாட்கள் விசேட அமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்து தருமாறு கோரிய பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் குறித்த வேண்டுகோள் மேற்படி உறுப்பினர்களால் எழுத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபை உருவாக்கப்பட்டு 42 மாதங்கள் நிறைவுற்றுள்ள இத் தருனத்தில் அமைச்சுக்கள் ரீதியில் துறைசார் முன்னேற்றம் என்ன . எமது மாகாணத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் , அபிவருத்திகள் என எவையுமே இல்லையெனவும் நிறைவேற்றக் கூடிய திட்டங்களையும் நிறைவேற்றாது எமக்கு கிடைத்த திட்டங்களின் சந்தர்ப்பங்களையும் தவறவிடுவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டு எழுகின்ற நிலையில் மேற்படி கோரிக்கை தற்போது எழுத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கையினை கையேற்ற பேரவைத் தலைவர் இதனை உரிய முறையில் ஆராய்ந்து தகுந்த பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.