சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் ஒன்று கடந்த 22-ந் தேதி காலையில் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது. ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த 15 வீரர்கள் உள்பட 29 பேருடன் புறப்பட்டு சென்ற இந்த விமானம், வங்காள விரிகுடா கடலுக்கு மேலே 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மாயமானது.
இது குறித்து தகவல் அறிந்த உடனே அந்த விமானத்தை தேடும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். அதன்படி போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல், விமானப்படைக்கு சொந்தமான 12 விமானங்கள் என மிகப்பெரும் படையே இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. எனினும் விமானம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் செம்பூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 37) என்ற கடலோர காவல்படை வீரர் பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மேலும் சில வீரர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது.
இதில் முக்கியமாக அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்துக்கு உட்பட்ட லொகாரு நகரை சேர்ந்த தீபிகா ஷியோரன் என்ற பெண் அதிகாரியும் ஒருவர். மலையக பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விமானப்படையில் சேர்ந்து பிளைட் லெப்டினன்டாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த நவம்பர் 22-ந் தேதிதான் திருமணம் நடந்தது. கணவர் குல்தீப் சிங் மும்பையில் கடலோர காவல்படை அதிகாரியாக பணியாற்றி வந்ததால் நாசிக்கில் இவர்கள் தங்கியிருந்தனர். இருவருக்கும் ஒரே இடத்தில் பணிமாறுதல் கேட்டு அவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், சமீபத்தில் தான் இருவருக்கும் போர்ட்பிளேருக்கு இடமாற்றம் கிடைத்தது.
போர்ட்பிளேருக்கு கிளம்புவதற்கு முன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த தீபிகா, கடந்த 16-ந் தேதி தான் மீண்டும் பணிக்கு திரும்பினார். இறுதியாக கடந்த 21-ந் தேதி தனது குடும்பத்தினருடன் அவர் தொலைபேசியில் பேசினார்.
அவர் சென்ற விமானம் மாயமான தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும் தங்கள் மகள் குறித்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையுடன் தொலைபேசிக்கு அருகிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர்.
இது குறித்து தீபிகாவின் தந்தை தலிப் ஷியோரன் கூறுகையில், ‘நாங்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் மகள் நிச்சயம் திரும்பி வருவாள். என்னுடைய மனைவியால் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஆனாலும் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவளுக்கு எதுவும் ஆகாது என எங்கள் உறவினர்களும் கூறுகிறார்கள்’ என்றார்.
குழந்தைப்பருவம் முதலே விமானத்தில் பறப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த தீபிகாவின் விமானியாகும் கனவு பலிக்கவில்லை எனவும், ஆயினும் விமானப்படையில் இணைந்ததன் மூலம் விமானத்தில் பறக்கும் அவரது ஆசை நிறைவேறியது என்றும் கூறிய தலிப், வானத்தில் பறக்க வேண்டும் என்ற அளவற்ற ஆசை கொண்ட தீபிகா அதே வானத்திலேயே காணாமல் போயிருக்கிறாள் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
தீபிகாவின் தாய் பிரேம் லதா கூறும்போது, ‘ஏதாவது அற்புதம் நிகழ்ந்து தீபிகாவும், அவருடன் சென்ற 28 பேரும் பத்திரமாக திரும்ப வேண்டுகிறேன்’ என்றார்.
இதைப்போல ஆந்திராவின் விசாகப்பட்டினம் லட்சுமி நகரை சேர்ந்த நாகேந்திர ராவ் (34), புச்சிரெட்டிபாலத்தை சேர்ந்த சின்னராவ் (55) ஆகியோரும் விமானத்தில் பயணம் செய்தனர். விமானம் மாயமான தகவல் அறிந்ததும் அவர்களது குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் ஆந்திராவை சேர்ந்த கட்டுமான பணியாளர்கள் ரவடா வரபிரசாத் பாபு (32), கண்ட்லா சீனிவாஸ் ராவ் (35), சாம்பமூர்த்தி, ஒடிசாவை சேர்ந்த சரண் மகரானா, பூர்ண சந்திர சேனாபதி ஆகியோரின் குடும்பங்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளன.