விலைவாசி அதிகரிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களும்தான் காரணம். விலைவாசியை குறைப்பதற்காக நாங்கள் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராகத்தான் வாக்களிக்கின்றோம். மாறாக எமது மாவட்டத்திலுள்ள இரு இராஜாங்க அமைச்சர்களும், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக இரு கைகளையும் உயர்த்தி விலைவாசி அதிகரித்தாலும் பரவாயில்லை எனத் தெரிவித்து, ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்கான மகளிர் அணி புனரமைப்புக் கூட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.றஞ்சினியின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்கான தலைவராக ஆறுமுகம் இரத்தினேஸ்வரியும், செயலாளராக நற்குணம் தேவமணியும் தெரிவு செய்யப்பட்டதோடு செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த சாணக்கியன் மேலும் கூறுகையில்,
தற்போது நாட்டில் பால்மா, எரிவாயு, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்தான் காரணம் என நினைக்கலாம். ஆனால், ஆச்சரியம் என்னவெனில், நமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களும்தான் காரணம். விலைவாசியைக் குறைப்பதற்காக நாங்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகத்தான் வாக்களிக்கின்றோம். மாறாக எமது மாவட்டத்திலுள்ள இரு இராஜாங்க அமைச்சர்களும், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இரு கைகளையும் உயர்த்தி விலைவாசி அதிகரித்தாலும் பரவாயில்லை எனத் தெரிவித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு எமது மக்கள் மொட்டு, படகு போன்ற சின்னங்களுக்கு வாக்களித்ததன் காரணமாகத்தான் அவர்கள் இருவரும் இவ்வாறான வேலைகளைச் செய்து வருகின்றார்கள். இதன் காரணமாகத்தான் எமது மாவட்ட மக்களும் விலைவாசிகளை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகின்றார்கள். வாக்களியுங்கள் என தெரிவித்தவர்களுக்கும், வேலை பெற்றுத் தருகின்றோம் என்றவர்களின் பிள்ளைகளுக்கும் வேலை கிடைத்துள்ளன. மாறாக வாக்களித்தவர்களுக்கும், வாக்களித்தவர்களின் பிள்ளைகளுக்கும் எதுவுமில்லை.
சாணக்கியன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற காரணத்தினால்தான் இங்கிருக்கின்ற வீதிகளில் தமிழர்கள் போகின்றார்கள். நமது பண்ணையாளர்களின் கால்நடைகளை வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து வெட்டி அழித்து வருகின்றார்கள். அதற்காக தாய்மார் வீதிக்கு வந்து தம்மை பிச்சை எடுக்கும் நிலைக்கு அரசு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் வாழும் கரையோரப் பிரதேசங்களை தெற்கிலுள்ளவர்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக கேள்விப்பட்டடேன். எம்மைப் போன்ற தமிழ் பிரதிநிதிகள் இல்லாவிட்டால் வீதிகள் இருக்கும். ஆனால் வீதியில் பயணிப்பதற்கு தமிழ் மக்கள் இருக்க மாட்டோம். கடல் இருக்கும். அங்கு மீன்பிடிப்பதற்கு தமிழ் மீனவர்கள் இருக்கமாட்டார்கள். விவசாய நிலங்களுக்கு விவசாயம் செய்வதற்கு தமிழ் விவசாயிகள் இருக்கமாட்டார்கள்.
என்னுடைய பாட்டனார் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்கள் இருந்து செயற்பட்டதனால்தான் எல்லைப்புறங்களில் தற்போதும் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர் அன்று செயற்பட்டிருக்காவிட்டால் பட்டிருப்பு பாலத்தையும் கடந்து வேறு இன மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். எனவே இவை அனைத்துக்கும் எதிர்வரும் தேர்தல்களில் முடிவெடுக்க வேண்டிய பெரும் பங்கு எமது மக்களுக்கு உள்ளது என்றார்.