முதல்-அமைச்சர் உள்பட 9 அமைச்சர்களை கைது செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

289 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களால் முதல்-அமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருமானவரித்துறையினர் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணமும், கைப்பற்றபட்ட ஆவணத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 9 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், அவர்களிடம் வழங்கப்பட்ட பணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் உள்ள விவரப்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு ஆகியோரிடம் பல கோடி ரூபாய்க்கு பணம் பட்டுவாடா நடந்துள்ளது. அப்போது அந்த ஆவணங்களை எடுத்து ஓடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எனவே, வருமானவரித்துறையினர், காவல்துறையினர், தேர்தல் ஆணையம் ஆகியவை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதல்-அமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் பல நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமருக்கு அவர்களை சந்திக்க நேரமில்லை. அதேபோல் தமிழக முதல்-அமைச்சரும் விவசாயிகளை சந்திக்கவில்லை. தொடர் போராட்டத்தால் விவசாயிகளுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். அதனால் அரசாங்கத்தை தூக்கி எறியக்கூடிய நிலை வரும்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்க, பேச்சுவார்த்தை நடத்த கூட மத்திய அரசு முன்வரவில்லை. கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் போது தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதில் தவறு இல்லை. உத்தரபிரதேசத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்திலும் தேசிய வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் கவர்னர்கள் மூலம் தலையீடு செய்கிறது. ஜெயலலிலதா தலைமையில் அமைந்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் அரசு கல்வி நிலையங்களின் தரம் குறைந்துவிட்டது. மாணவர்கள் அரசு கல்வி நிலையங்களில் சேர தயக்கம் காட்டுகின்றனர். அதனால் அரசு பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமான வரித்துறையில் பல்வேறு சட்ட திருத்தங்களை செய்து சாதாரண, நடுத்தர மக்களும் பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பெரிய பண முதலைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி காரணமாக மக்கள் குடிநீர் தட்டுப்பட்டால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பாண்டிச்சேரியில் ஆளுனர் கிரண்பேடி அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுத்த நாராயணசாமி அரசுக்கு எத்தனை தொந்தரவுகளை தரமுடியுமோ அத்தனையும் தந்து கொண்டிக்கிறார். பா.ஜ. தூண்டுதலால் இது நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆம்பூர் சட்டமன்ற காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஆம்பூரில் நடந்தது.‘டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் சந்திக்கவில்லை. மத்திய அரசால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. வெற்றி பெற்ற உடன் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவரவர் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வங்கியில் மணிகணக்கில் காக்க வைத்ததுதான் அவரது சாதனை ஆகும்’ என்றார்.கூட்டத்தில் மாநில பொருளாளர் நாசே.ஜெ.ராமச்சந்திரன், மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.