ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வக்கீல்கள் போராட்டம் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.
திருச்சியில் வக்கீல்கள் புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து சட்டநகல் எரிப்பு, மனித சங்கிலி, உண்ணாவிரதம் என பல போராட்டங்களை நடத்தினர். இன்று சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியிலிருந்து சுமார் 500 வக்கீல்கள் நேற்று இரவே புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஐகோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அகில இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எச்சரிக்கையை மீறி வக்கீல்கள் போராட்டம் தொடர்வதால் நேற்று அகில இந்திய பார் கவுன்சில் 105 வக்கீல்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தில் வக்கீல்கள் இளமுருகன், மதியழகன், புனிதன், ராஜேந்திர குமார், சையது தாஜூதின் மதானி, சகாபுதீன், காந்தி மதிநாதன், சவுந்தர்ராஜன், சுப்ரமணியன், தஞ்சை மாவட்டத்தில் வக்கீல் தஞ்சை நல்லத்துரை ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் வக்கீல்கள் ஜெகநாதன், நெடுஞ்செழியன், தமிழ் ராஜேந்திரன், ஜெகநாதன், சரவணன், பாரதிதாசன், தாசப்பிரகாஷ், ராமச்சந்திரன், திருமூர்த்தி, செல்வக்குமார், ஆனந்தன், விஜயகுமார், யோசாலி, சண்முகசுந்தரம், ரமேஷ், சிவசண்முகம், மாணிக்கம் ஹரிகிருஷ்ணன், சீனிவாசன், விக்டர், வின்சென்ட் ராஜா ஆகியோரையும் அகில இந்தி பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்திற்காக திருச்சி, கரூர் வக்கீல்கள் திட்டமிட்டப்படி சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.