வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் இன்று (06) அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சிய குறுகிய கண்களை உடைய சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்காக இயங்கிய படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடல் தொழில் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை தொடர் சோதனை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் கடற்பகுதியில் தரித்துநின்ற சந்தேகத்துக்கிடமான படகை சோதனை செய்தபோது குறுகிய கண்களை கொண்ட சட்டவிரோத சுருக்குவலையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகு நாகர்கோவில் பகுதியை சேர்ந்தது என்றும் கடற்படையின் வருகையை அறிந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் கடற்படையினர் தெரிவித்ததுடன், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சிலர் கடற்படையுடன் முறுகலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட படகு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.