ஆண்டுதோறும் கோடை சீசனின்போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற் காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரைப் பந்தயங்கள் ஏப்ரல் மாதம் தொடங்கி, ஜுன் மாதம் வரை நடைபெறும்.
வழக்கமாக ஏப். 14-ம் தேதி குதிரைப் பந்தயங்கள் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே நேற்று குதிரைப் பந்தயம் தொடங்கியது. நடப்பாண்டில் 137-வது குதிரைப் பந்தயங்கள் ஜூன் 2-ம் தேதி வரை நடக்கின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முக்கியப் பந்தயங்களான ‘நீலகிரி டர்பி’ மற்றும் டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவு கோப்பை மே 12-ம் தேதியும், ‘ஊட்டி ஜுவைனல் ஸ்பிரின்ட் கோப்பை’ மே 25 மற்றும் ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி மே 26-ம் தேதியும் நடக்கின்றன. மொத்தம் 17 நாட்கள் குதிரைப் பந்தயங்கள் நடைபெற உள்ளன. முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் போட்டியில் `ஆல் ஸ்டார்ஸ் குதிரை’ வெற்றிபெற்றது. வெல்கம் கோப்பைக்கான போட்டியில் 6 குதிரைகள் பங்கேற்றன. கடைசி நேரத்தில் ப்ளூமெட் என்ற குதிரை போட்டியில் இருந்து விலக்கப்பட்டதால், 5 குதிரைகள் ஓடின. இதில் `லைட் தி வேர்ல்டு’ குதிரைவெற்றி பெற்றது. இதையடுத்து பயிற்சியாளர் விஜய் சிங் மற்றும் ஜாக்கி சி.உமேஷுக்குப் பரிசுத் தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.