தி.மு.க. ஆட்சி வழங்கிய இடஒதுக்கீடுகளால் நிர்வாக ஆளுமையில் பெண்கள்

61 0

 தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், கோர்ட்டுகள் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகமாக பெண்கள் பணிபுரிகிறார்கள்.உள்ளாட்சி நிறுவனங்களைக் கவனித்தால், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மேயர்கள் என எங்கும் பெண்கள் அமர்ந்து ஜனநாயக கடமையாற்றுவதைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திகழ்ந்து வரும் அதிசயங்கள்.1989-ம் ஆண்டில் கருணாநிதி ஓர் ஆயுதத்தை கையில் எடுத்தார்.

இடஒதுக்கீடு என்ற ஆயுதம்தான் அது. தி.மு.க. தேர்தலில் வென்றால், அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 1989-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்.அதன்படி அவர் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றபிறகு முதல் அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட முடிவெடுக்கப்பட்டது.

3.6.1989-ல் கருணாநிதி பிறந்த நாளில், அரசாணை வெளியிடப்பட்டு, பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அரசு பணிகளில் வழங்கும் பணி தொடங்கியது.அதனால்தான், எல்லா அலுவலகங்களிலும் மகளிர் 100-க்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். அதேபோல, கருணாநிதி, 1996 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினார்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார்.அந்த தேர்தலில் வென்ற 1 லட்சத்து 16 ஆயிரத்து 747 மக்கள் பிரதிநிதிகளில் 44,143 பெண்கள் வெற்றி பெற்று வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர்கள் வரை பொறுப்பேற்ற ஒரு மாபெரும் ஜனநாயக புரட்சி தமிழ்நாட்டில் அரங்கேறியது.இவை மட்டுமல்ல, 1989-ல் அரசு பணிகளில் மகளிருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு கருணாநிதி வழங்கினார். இதனால் எல்லா அரசு அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையில் மகளிர் பணிபுரிகின்றனர்.குரூப்-1 பணிகள் மூலம் அரசு பணிகளில் சேரும் மகளிர் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தலைமைப் பதவிகளில் வீற்றிருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் 323 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெண்கள் மட்டும் 96 பேர். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் செயலாளர்கள், முதலமைச்சரின் செயலாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்களாக பெண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.38 மாவட்ட கலெக்டர்களில் 17 பேர் மகளிர் கலெக்டர்களாக வீற்றிருந்து மாவட்ட நிர்வாகங்களை மிகச்சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் கருணாநிதி நடைமுறைப்படுத்திய இந்த மகளிர் இடஒதுக்கீட்டுச் சலுகையை தற்போதுதான் சில மாநிலங்கள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இப்படி மகளிர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடுகள் மூலம் கருணாநிதி வழியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்ற பின் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.2021 தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கி பெண்குலம் போற்றுகிறார்கள்.

கல்லூரி மாணவிகள் 4 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி அவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கிறார்.ஆனால், பா.ஜனதா ஆட்சியில் இடஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மூலமாக மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடுகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவனம் செய்தார்.ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதா மத்திய அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவீத அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.

27 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனியும் பா.ஜனதா ஆட்சி தொடர்ந்தால் இடஒதுக்கீடுகள் மத்திய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும்.தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும். பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகி விடும்.

அந்த நிலையை இப்போதே முயன்று தடுத்திடல் வேண்டும். பா.ஜனதா ஆட்சி மத்தியில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய தருணமிது. இதைத் தவறவிட்டால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும்.மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும். விழிப்புடன் இருப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியை அமைப்போம். நாடும் நாமே நாற்பதும் நாமே என்ற நிலையை உருவாக்குவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .