பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவாக, மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று பிரசாரம் செய்தார்.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதி நம்மாழ்வார்பேட்டை சந்தை பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.பேரணியின்போது, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாங்கள் ஓட்டு கேட்டு வருகிறோம். ஆனால், தலைமை இல்லா ‘இந்தியா’ கூட்டணி, யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியுமா?கேரளாவில் இந்தியா கூட்டணியினர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். ஆனால், டெல்லியில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கின்றனர்.
நாட்டிலேயே கலாசாரம் மிக்க பூமியாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், தி.மு.க. சனாதன தர்மத்தை எதிர்க்கிறது. இதற்கு நாடே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களை சொல்ல முடியுமா? பா.ஜனதா தொண்டர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க கடுமையாக பணியாற்ற வேண்டும்.
பா.ஜனதாவுக்கு மக்கள் ஓட்டு போடுவதற்காக நாம் உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரசாரத்தின் போது வட சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு 5 கிலோ எடை கொண்ட மீன் வழங்கி வரவேற்றார்.இதேபோல் திருவள்ளூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு ஆதரவு திரட்டி திருநின்றவூரில் ஸ்மிரிதி இரானி பிரசாரம் மேற்கொண்டார்