இவ்வாண்டில் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரி வருமானத்தை அதிகரித்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் – கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்னணியில் இவை அரசியல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறியுள்ளது.
அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கிளை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மேற்கூறப்பட்ட விடயம் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைவரம், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள், முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அடையப்பட்ட முன்னேற்றங்கள், இவ்வாண்டில் இலங்கை தொடர்பான இலக்குகள் போன்ற பல்வேறு விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தேசிய ரீதியில் முன்னுரிமைக்குரிய விடயங்களையும், நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளையும், அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்ட 2023 – 2027 வரையான ஐ.நா நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்துக்கு அமைய அடையப்பட்ட முன்னேற்றங்களையும் இவ்வறிக்கை வெளிக்கொண்டுவந்திருப்பதாக இலங்கைக்காக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்ச் தெரிவித்துள்ளார்.
‘2023 இல் இலங்கைக்கான எமது மனிதாபிமான உதவிகள் மீட்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை நோக்கி நிலைமாற்றமடைந்தன. அது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும், எமது முகவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் வருடமாக அமைந்திருந்தது. சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், வறுமையைத் தணிப்பதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் வருடத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை நிலைபேறான அபிவிருத்திக்கான தேசிய இலக்கை அடைந்துகொள்வதற்கு நாம் உதவுவோம்’ எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நாவின் வருடாந்த அறிக்கையின்படி 2023 இல் நாடளாவிய ரீதியில் சுமார் 2 இலட்சம் பேருக்கு நிதிசார் உதவிகளும், 2 மில்லியனுக்கு மேற்பட்டோருக்கு உணவுப்பொருள் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை ‘2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இலங்கையில் 2023 இல் மீட்சிக்கான குறிகாட்டிகள் தென்பட்டன. வெளிநாட்டுப்பணவனுப்பல்கள், சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பவற்றில் ஏற்பட்ட தொடர் அதிகரிப்பு எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியை இலகுபடுத்தியது. எவ்வாறிருப்பினும் பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்தி நிலைவரம் தொடர்ந்தும் சவால் மிக்கதாகவே காணப்பட்டது’ என ஐ.நாவின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘2023 மார்ச் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நிதிநெருக்கடியைக் காரணங்காட்டி பிற்போடப்பட்டமை ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது. 2024 இல் தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து 2025 இல் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடாத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்தார். அதேபோன்று பிரதானமாக பொருளாதார கொள்கைத்தீர்மானங்களால் தூண்டப்பட்ட சில ஆர்ப்பாட்டங்கள் சட்ட அமுலாக்கப்பிரிவினரால் மிகக்கடுமையான முறையில் கையாளப்பட்டன. சமூகங்களுக்கு இடையிலான அமைதியின்மை, குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் மக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்ட குழப்பங்கள் என்பன சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன’ என்றும் ஐ.நா அதன் அறிக்கையில் விசனம் வெளியிட்டுள்ளது.
மேலும் ‘2023 இல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலம் என்பவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்ததுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ செயற்திட்டம் மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலுவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 இல் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரிவருமானத்தை விரிவுபடுத்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் இவை அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான மீட்சிக்கு உதவுதல், நிலையான சமாதானத்தை உறுதிசெய்தல், ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வதற்கும், ஆட்சியியல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கல், காலநிலைமாற்ற சவால்களைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கே இவ்வாண்டு தாம் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக இவ்வருடாந்த அறிக்கை ஊடாக இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.