இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி கடந்த பெப்ரவரி மாதம் 9.5 சதவீதத்தினால் உயர்வடைந்திருப்பதாகவும், அதற்கமைய 4.52 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட வெளிநாட்டுக்கையிருப்பு பெப்ரவரியில் 4.95 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நாட்டின் பொருளாதார நிலைவரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றத்தைக் காண்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி அண்மையகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தற்போது பெறுபேறாக நிலைமாற்றமடைய ஆரம்பித்திருப்பதை இவ்வதிகரிப்பு புலப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால கூட்டத்தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் முக்கிய அமைச்சர்மட்ட கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் என்பன 17 – 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும். இக்கூட்டத்தில் இலங்கை சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி ஷெஹான் சேமசிங்கவின் வொஷிங்டன் பயணத்துக்கு முன்பதாக கடந்த வாரம் அவருக்கும், இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜுலி சங், சர்வதேச நாணய நிதியத்தின் கோடைகால கூட்டத்தொடரானது கொள்கைவகுப்பாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினர் அனைவரும் இணைந்து உலகளாவிய பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான வாய்ப்பை வழங்குமென தெரிவித்துள்ளார்.
‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பொறுத்தமட்டில் இலங்கை மிகச்சிறந்த முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இலங்கை மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்யக்கூடியவகையில் அடுத்தகட்ட கடன்நிதியை விடுவித்துக்கொள்வதற்கு அவசியமான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கும் என நம்புகின்றோம்’ எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.