உணவுப்பாதுகாப்பின்மையால் பெருந்தோட்டப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்

49 0

2023 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி நாடளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலைவரம் தீவிரமடைந்துவருவதாகவும், இதன்விளைவாக பெருந்தோட்டப்பகுதி மக்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டுக்கான உலக உணவுத்திட்டத்தின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களின் ஒன்றான உலக உணவுத்திட்டம் கடந்த இருவருடங்களாகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிவருகின்றது.

அதன்படி கடந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார நிலைவரம், உணவுப்பாதுகாப்பு நிலை, வழங்கப்பட்ட உதவிகள் போன்ற தகவல்களை உள்ளடக்கி உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாம் முன்னெடுத்த உணவுப்பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் 17 சதவீதமானோர் மிதமான உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகக் கணிப்பிடப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிலைவரம் ஓரளவு முன்னேற்றமடைந்திருப்பினும், அன்றாட கூலித்தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பெருந்தோட்டப்பகுதிகளில் பணிபுரிவோர் உள்ளடங்கலாக வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினர் தற்போதும் மிகையான சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் உணவுப்பாதுகாப்பு நிலைவரம் மிகமோசமடைந்துவருவது கண்டறியப்பட்டதுடன், குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியை அடுத்து உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் போசணை மட்டம் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. 2023 இல் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் 120,230 பேர் மிதமான மந்தபோசணை நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 27 சதவீதமானோரைச் சென்றடைந்திருப்பதுடன், இந்தப் பெறுமதி ஏனைய அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வானதாகும். இருப்பினும் இச்செயற்திட்டங்களை ஒருங்கிணைத்தல், முறையான கண்காணிப்பை மேற்கொள்ளல் போன்றவற்றில் அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

உலக உணவுத்திட்டத்தின் இவ்வருடாந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கைக்கான முதலாம் கட்ட உதவி வழங்கலின் ஊடாக சுமார் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உணவும், 1.2 மில்லியன் பேருக்கு நிதி மற்றும் உணவுசார் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 12,817 மெட்ரிக் தொன் அரிசி, சோளம், சோயா என்பன பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 11.7 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.