ஊருபொக்க கந்தேகும்புர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் உள்ள பாறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கந்தேகும்புர, பேரலபநாதர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரும் அவரது மனைவியும் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளதுடன், நேற்று (04) குறித்த நபர் வீட்டில் இருந்த நிலையில், மனைவி வேலைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் மனைவி மாலை வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது கணவர் வீட்டில் இருக்கவில்லை. மறுநாள் காலை வரை கணவன் வீடு திரும்பாததால் அவரை தேடிய போது, வீட்டின் அருகே உள்ள பாறையில் அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொகரெல்ல தலஹின்ன பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி தனது மகள் வீட்டில் இருந்து வந்து இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொகரெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்