இந்தியாவை சேர்ந்த மாணவர் உமா சத்யசாய் காடே என்பவர் அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.இந்த நிலையில் மாணவர் உமா சத்யசாய் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, ஒகியோவின் கிளீவ்லேண்டில் இந்திய மாணவர் உமா சத்யசாய் காடேவின் துரதிருஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.அவரது குடும்பத்தினருடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
மாணவர் உமா சத்யசாயின் உடலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்புவது உள்பட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் மரணத்துக்கு காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 10-வது சம்பவம் இதுவாகும். கடந்த மாதம் கொல்கத்தா நடன கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆந்திர மாணவர், வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்.அதே போல் பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளி மாணவர் சமீர்காமத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.