ஜேர்மனியில், உயிரியல் பூங்காவிலிருந்து திருடப்பட்ட அரியவகை குரங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
ஈஸ்டர் தினத்தன்று, ஜேர்மனியின் Leipzig நகரிலுள்ள உயிரியல் பூங்கா பணியாளர்கள், விலங்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அரியவகை சிங்க வால் குரங்கு ஒன்றைக் காணவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
மேலதிக ஆய்வில், உயிரியல் பூங்காவுக்குள் மர்ம நபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதும், அவர்கள் அந்தக் குரங்கை பொறிவைத்துப் பிடித்துள்ளதும் தெரியவந்தது.
Ruma என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் சிங்கவால் குரங்குக்கு 15 வயதாகிறது. சிங்கவால் குரங்குகள் அழிவின் விளிம்பிலிருக்கும் விலங்குகள் ஆகும்.
இந்நிலையில், Reudnitz என்னுமிடத்தில் ஜாகிங் சென்றுகொண்டிருந்த ஒருவர் ஒரு மரத்தின்மீது ஒரு விலங்கு அமர்ந்திருப்பதைக் கவனித்துள்ளார். கவனித்துப் பார்க்கும்போது, அது காணாமல்போன Ruma என்பது தெரியவரவே, அவர் பொலிசாரை அழைத்துள்ளார்.
பொலிசாரும் உயிரியல் பூங்கா ஊழியர்களும் சேர்ந்து வலை மூலம் Rumaவைப் பிடித்து, பத்திரமாக மீண்டும் உயிரியல் பூங்காவில் கொண்டு சேர்த்துள்ளார்கள்.
Rumaவுக்கு உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், ஆனால், அது சோர்வுடன் காணப்படுவதாகவும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இத்தகைய குரங்குகளை வீடுகளில் வளர்ப்பது கடினம். அப்படியிருக்கும்போது, அந்த திருடர்கள் எதற்காக அதைத் திருடிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.