“அண்ணாமலை அதிக திருடர்களை பிடித்து பாஜகவில் இணைத்துள்ளார்” – ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

72 0

 பாஜக மாநில தலைவரான பிறகு தான் அதிக திருடர்களைப் பிடித்து பாஜகவில் இணைத்துள்ளார் அண்ணாமலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆத ரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் அவர் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருந்தபோது, மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு, பழனி சாமி தலைமையிலான ஆட்சி ஒரு அடிமை ஆட்சியாகவே இருந்தது.அத்தகைய அடிமை ஆட்சி நடத்தி யவர்கள் தற்போது மக்களிடம் எந்த முகத்துடன் வாக்கு சேகரிப்பார்கள்? எனவே இந்தத் தொகுதி யில் அதிமுக வேட்பாளர் வாக்குகேட்பதற்கு அருகதை இல்லை என் பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதேபோல் இத்தொகுதியில் பாமகவும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் நிறுவனரும், தலைவரும், காலை ஒரு கட்சி, மதியம் ஒரு கட்சி, மாலை ஒரு கட்சி, இரவு ஒரு கட்சி என பேச்சு நடத்தி ஒப்பந்தம் போடக்கூடிய ஒரு சந்தர்ப்பவாத கட்சி. அந்தக் கட்சி தான் தற்போது பாஜகவுடன் கை கோர்த்திருக்கிறது.

பாஜக தலைவரான அண்ணாமலை, மிஸ்டு கால் மூலமாக கட்சியில் உறுப்பினராக சேரலாம் என அறிவித்தபோது, பலர் மிஸ்டு கால் கொடுத்துவிட்டு, கட்சியில் சேர சென்னைக்கு சென்றனர். அந்த மிஸ்டு கால் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பாஜக அலுவலகம் சென்றபோது, அங்கு மிஸ்டு கால் கொடுத்தவர்களில் பெரும்பான்மையோர் தலைமறைவு குற்றவாளி, வழிப்பறி குற்றவாளி, கொலை குற்றவாளி உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது. அப்போது போலீஸாரை பார்த்ததும் பலர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

இதன்மூலம் என்ன தெரியவருகிறது என்றால் அண்ணாமலை காவல் அதிகாரியாக இருந்தபோது பிடித்த திருடர் களை விட, பாஜக தலைவரான பிறகு பிடித்த திருடர்களே அதிகம். இந்தக் கூட்டணியில் தான் பாமக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்புஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என அறிவித்தார். இதுவரை எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார்? பல்வேறு சட்டத் திருத்தங்களை செய்து, நாட்டை வீணடித்துள்ளனர். தேர்தல் பத்திர முறைகேடு உச்சநீதிமன்றம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன்மூலம் ரூ.16 ஆயிரம் கோடி முறைகேடு அம்பலமானதால் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் அச்சத்துக்கு ஆளாயினர். எனவே மத்திய ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார்.