புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்

65 0

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று (சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71. புகழேந்திக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும். செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரான புகழேந்தி போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனிடம் தோல்வியை தழுவினார். இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை தோற்கடித்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். திமுகவில் அனுபவம் மிக்க அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.கடந்த சில நாட்களான உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகழேந்தி, நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக டிஸ்சார்ஜ் ஆகி வந்தார். பொதுக்கூட்ட மேடையில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.35-க்கு அவர் உயிரிழந்தார்.

வாழ்க்கை குறிப்பு: விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் பிறந்தவர் புகழேந்தி (71) விவசாயியான இவர் எஸ்எஸ்எல்சி வரை படித்துள்ளார். 1973-ம் ஆண்டு திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்த இவர் கோலியனூர் ஒன்றியச் செயலாளராக இருந்து விழுப்புரம் தெற்கு மாவட்ட பொருளாளராகவும், பின்னர் மாவட்ட அவைத் தலைவராகவும், அதன் பின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவிவகித்து வந்தார். 1986-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும், 1989-ம் ஆண்டு கண்டமானடி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும், 1996-ம் ஆண்டு கோலியனூர்ஒன்றியக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் 2021ம் ஆண்டு பொதுத் தேர்தலில் விக்கிரவாண்டி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.