ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 8 கோடி ரூபா மோசடி: பெண்ணுக்கு விளக்கமறியல்!

24 0

ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 8 கோடி ரூபாவை  மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை  ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மாளிகாவத்தை – லக்விரு செவன வீடமைப்புத் தொகுதியில் மறைந்திருந்த இந்த பெண்  அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்று தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ருமேனியாவில் பல துறைகளில் வேலைவாய்ப்பை வழங்கவும் அவர் அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளார் .

இந்நிலையில் , ருமேனியாவில் அனுமதிக்கப்படாத பணியிடங்களுக்கு அனுப்புவதாக கூறி 88 பேரிடம் பணம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக விசாரணை நடத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வருமாறு விசாரணை அதிகாரிகள் கூறிய போதும், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகாமல் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் .

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த முகாமையாளரையும் மற்றுமொருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .