சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைத்தே தீருவேன் : மைத்திரி

265 0

தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்கு தான் உறுதி பூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சகோதர ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சக்திமிக்க எதிர்காலமொன்றை உருவாக்குவதற்காக தற்போதைய அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தனது அரசின் மீது வீசப்பட்டு வரும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களையும், அபத்தமான விமர்சனங்களையும் எதிர்கொண்டு சிறப்பானதொரு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியில் தங்களை அமர்த்திய மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் தான் ஒருபோதும் தவறப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தூய்மையான அரசியல் சூழ்நிலையொன்றை இந்த நாட்டில் உருவாக்கி இளைஞர்களிடம் எதிர்கால ஆட்சியை ஒப்படைப்பதே தனது இலக்கு எனவும், இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணிக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசான மஹிந்த அரசு செய்த மாபெரும் தவறுகளை தனது அரசு ஒருபோதும் செய்யப்போவதில்லை எனவும், தங்களுக்கு வாக்களித்த ஒவ்வொரு குடிமகனின் நலனிலும் தான் அக்கறை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.