முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், பொதுத் தேர்தலை பெற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முயற்சி இன்னும் முடிவடையவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பிலும் அரசியல் கலந்துரையாடல்களிலும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் சில அரசியல் மாறுதல்கள் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் குழுவொன்று அண்மையில் நடைபெற்ற நிறைவேற்று சபையில் அறிவித்துள்ளது.
இந்த அறிக்கையுடன் தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்டோர் குழுவாக ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் நெருக்கடி நிலையை அடைந்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு கோடியே அறுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில் இம்முறை அந்த எண்ணிக்கை 10 இலட்சத்தால் அதிகரித்துள்ளது.
18 வயது நிரம்பிய வாக்காளர்கள் இவ்வாறு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.