ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது

636 0

201607251058419120_Additional-water-from-Mettur-dam-was-opened-today_SECVPFமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 7 மணி முதல் கூடுதலாக 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

விவசாயம் செழிக்க வேண்டி காவிரி அன்னையை மலர் தூவி வணங்கும் விழா என்று அழைக்கப்படும் ஆடிப்பெருக்கு விழா வருகிற 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 7 மணி முதல் கூடுதலாக 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீரை சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் மலர் தூவி வணங்கினார். ஏற்கனவே குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆடிப்பெருக்கு விழாவுக்காக திறக்கப்பட்ட 3 ஆயிரம் கன அடி தண்ணீர் சுரங்க மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது.

கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொணடாட வசதியாக கூடுதலாக 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று இன்று காலை 7 மணி முதல் கூடுதலாக 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 28-ந்தேதி வரை தொடர்ந்து குடிநீருக்கு தலா 2 ஆயிரம் கன அடியும், ஆடிப்பெருக்கு விழாவுக்காக கூடுதலாக 3 ஆயிரம் கன அடியும் உள்பட மொத்தம் 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணிர் திறக்கப்படும். 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை குடிநீருக்கு தலா 2 ஆயிரம் கன அடி வீதமும், கூடுதலாக ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் சம்பத் கூறினார்.

இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாத ரெட்டி, மேட்டூர் நகர்மன்ற தலைவர் லலிதா சரவணன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி, உதவி நிர்வாக பொறியாளர் வசந்தன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 56.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து தலா 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 155 கன அடியாக உள்ளது.