அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாதியர்களின் எதிர்நோக்கும் சம்பளம் மற்றும் சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார மற்றும் தாதியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள் தமது கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் 72 தொழிற் சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த பாரிய போராட்டங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இடம் பெற்றுள்ளது. சுகாதார துறையில் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற மேலதிக கொடுப்பனவு 35 ஆயிரம் ரூபாவை எமக்கும் வழங்க வேண்டும். 72 தொழிற்சங்கங்க உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே எமது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டின் ஜனாதிபதி, நிதி அமைச்சர் இவ்விடயத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.
நாங்களும் எமது தொழிற்சங்கமும் அரசுக்கு கால அவகாசம் வழங்கி வந்தோம். அப்பாவி மக்களுக்காக எமது போராட்டங்களை தொடர்ச்சியாக நாங்கள் நிறுத்தி மக்களுக்காக எமது சேவைகளை முன்னெடுத்து வந்தோம். எனினும் இந்த நாட்டின் அரசு எமக்கு நீதியான தீர்வை வழங்க முன் வருவதாக தெரியவில்லை.
இதனால் எமது தொழிற்சங்க போராட்டம் நாடளாவிய ரீதியில் நான்கு (4) மணித்தியாலமாக முன்னெடுத்தோம். எனினும் மன்னார் மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலை 11 மணி தொடக்கம் 12 மணி வரையான 1 மணி நேரம் எமது போராட்டத்தை முன்னெடுத்தோம். எமக்கு இன்றைய தினம் நீதியான தீர்வு கிடைக்காத வகையில் எமது போராட்டம் மீண்டும் தொடரும். என போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.