“மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும்” என சிவகாசியில் நடந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம், நடையனேரி, எம்.புதுப்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “உங்களை பார்த்து பேசுவது எனது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் உள்ளது.நாம் அனைவரும் உறவினர்கள் தான். விருதுநகர் தொகுதியில் குடிநீர், பேருந்து சேவை, சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரெட் பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் பட்டாசு தொழில் முடங்கி உள்ளது.
லைட்டர் பயன்படுத்துவதால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகள் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர் என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரியும். நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை.
என்ன செய்ய போகிறோம் என்பதை பேச வந்துள்ளேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுகவை இரும்பு பெண்மணியாக ஜெயலலிதா வழிநடத்தியதை போல், விஜயகாந்த் மறைவிற்குப் பின் தேமுதிகவை பிரேமலதா வழிநடத்தி வருகிறார்.
மக்களவையில் உங்களது குரலாக எனது குரல் ஒலிக்கும். மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் நீண்ட நாள் கனவு. எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடையும். நீங்கள்தான் எனக்கு தாய் தந்தை. எனவே எனக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.