பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை

45 0

அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டிபிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்படுவது முக்கிய சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கை பிரதமருக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவை பிரிவு கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர்கள், அரசாங்க பிரதிநிதிகள், மூத்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் அலுவல்பூர்வ நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்தப்படக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும், வெளிநாட்டு தூதர்கள் பாகிஸ்தானுக்கு வரும்பொழுது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிக்கும் வகையில் ஒரு நெறிமுறையாக சிவப்பு கம்பளங்களை பயன் படுத்தலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற செலவினங் களை குறைத்து, அந்த நிதியை முக்கிய நிர்வாக நடவடிக்கைகளுக்கு திருப்பிவிடும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சலுகையை கைவிட முடிவு: சிக்கன நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் தானாக முன்வந்து தங்களது சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட கடந்த வாரம் முடிவெடுத்தனர். சிக்கன நடவடிக்கைகளே அரசின் முதன்மையான முன்னு ரிமை நடவடிக்கை என்று பாகிஸ்தான் பிரதமர் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.