பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14 ஆக குறைக்கும் சட்டமூலத்தை மீளப்பெற்றார் நீதியமைச்சர்

46 0

பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14ஆக குறைக்கும் வகையில் தண்டனை சட்டகோவையின் 364 ஆம்  பிரிவை திருத்துவதற்கான இரண்டாம் மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட  உத்தேச சட்டமூலத்தை  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  விஜயதாச ராஜபக்ஷ மீளப்பெற்றுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு அரசியல் மற்றும் சிவில் தரப்பு மத்தியில் கடும் விமர்சனமும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே ‘தண்டனைச் சட்டக் கோவையின் 364ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டு 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம்  நீதியமைச்சுக்கு அறிவித்திருந்தார்.

தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சட்டமூலத்தின் பாரதூரத்தன்மையை சுட்டிக்காட்டி  சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை மீளப்பெற்றுக்கொண்டார்.