மகாவலி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற யுவதி மீட்பு!

95 0

மகாவலி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற யுவதி ஒருவரை இளைஞர்கள் சிலர் இணைந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர் மினிப்பே பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியாவார்.

இவர் மஹியங்கனை – கண்டி  வீதியில் மகாவலி ஆற்றிற்கு அருகில் உள்ள வெரகங்தொட்ட பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற போதே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்த இளைஞர்கள் சிலர்  இந்த யுவதி ஆற்றில் குதிக்கப் போவதைக் கண்டு அவரை  தடுப்பதற்காக விரைந்த போது அவர் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த இளைஞர்கள், ஆற்றில் குதித்த யுவதியை மீட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த யுவதியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு வரவிருந்த அம்பியுலன்ஸ் சேவை 45 நிமிடங்கள் தாமதமானதால், யுவதியை முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பாலத்திற்கு அருகிலிருந்து இந்த யுவதியின் கையடக்கத்தொலைபேசி கிடைத்துள்ள நிலையில் பொலிஸார் யுவதியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.