வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்: இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியீடு

53 0

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கு 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.