நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

55 0

 பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவு செய்தி திரை உலகை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்த நடிகர். தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் நடிகராக நடிப்பார். அதற்கு அவரது குரல், மேனரிசம், உடல் மொழியும் பொருத்தமாக இருக்கும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் காலமானார்.