அப்துல் கலாம் நினைவிடத்தில் சிலை அமைக்கும் பணி தீவிரம்

441 0

201607251128189618_work-on-intensity-of-the-memorial-statue-of-Abdul-Kalam_SECVPFமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி வடகிழக்கு மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராமேசுவரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு பகுகளிலிருந்து ராமேசுவரம் வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனையொட்டி அந்த பகுதியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அப்துல்கலாமின் நினைவிடம் உலகத்தரத்தில் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி நினைவிடம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே அப்துல் கலாமின் மணிமண்டபம், அருங்காட்சியம், அறிவுசார் மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக இடத்தை கையகப்படுத்தும் பணியை மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை மறுநாள் (புதன்கிழமை) அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் 7 அடி உயர வெண்கலத்தால் ஆன அப்துல்கலாம் சிலையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான பணிகள் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடந்து வருகிறது.

அன்றைய தினத்தில் அருங்காட்சியகம், மணி மண்டபம், அறிவுசார் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.அப்துல்கலாம் நினைவிடத்தில் சிலை அமைக்க பீடம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. நேற்று ஐதராபாத்தில் தயார் செய்யப்பட்ட வெண்கல சிலை வேன் மூலம் ராமேசுவரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அப்துல்கலாம் பயன்படுத்திய பொருட்களும் பேய்க்கரும்பு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அப்துல்கலாமை போற்றும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் குபேந்திரன் என்பவர் மணலால் 100 முகங்கள் கொண்ட அப்துல் கலாம் முக சிற்பத்தை அமைத்து வருகிறார். அப்துல்கலாம் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ராமேசுவரம் வருவதற்கான சுற்றுப்பயண திட்டம் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 27-ந்தேதி டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்தும், மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியும் பேசுவார் என்று கூறப்படுகிறது.

அன்றைய தினம் பேய்க்கரும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரி மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.