ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து கேவலப்படாமல் மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

57 0

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்றவர்களுக்கு தற்போது அங்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை. அதனால்  எமது நண்பர்கள் தொடர்ந்தும் அங்கிருந்து அசிங்கப்படாமல் தங்களின் தாய் வீட்டுக்கு மீண்டும் வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அவர்களுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (26) இ்டம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் எமது நண்பர்கள் மீண்டும் தங்களது தாய் வீட்டுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இடம் இல்லை. அதனால் தொடர்ந்தும் எமது நண்பர்கள் அங்கு இருப்பதால், அவர்கள் கோழைகளாக்கப்பட்டு மலினப்படுத்தப்படும் நிலையே ஏற்படும். தாய் கட்சியின் செயலாளர் என்றவகையில் பொறுப்புடன் ,இந்த அழைப்பை விடுக்கிறேன். ஐக்கிய தேசிய கட்சியின் கதவு எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடந்த காலங்களில் இருந்துவந்த முரண்பாடுகள் காரணமாக கட்சியை விட்டு பிரிந்துசென்று சஜித் பிரேமதாசவின் மீது நம்பிக்கை வைத்து அவரை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள். அதில் நியாயம், அநியாயம் இருக்கலாம். ஆனால் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் அவர்களுக்கு இருந்துவந்த இடத்தை வேறு நபர்கள் உரித்தாக்கிக்க்கொண்டுள்ளனர். நாலக்க கொடஹேவா, ஜீஎல். பீரிஸ் போன்றவர்களின் ஆலாேசனை வழிகாட்டலின் பிரகாரமே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் செயற்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை கட்டியேழுப்பவே ஐக்கிய மக்கள் சக்தி அமைத்துக்கொண்டு பிரிந்து சென்றார்கள். ஆனால் தற்போது அந்த நோக்கத்தை செயற்படுத்த அங்கு இவர்களுக்கு இடமில்லை. பொருளாதாரம் தொடர்பில் ஹர்ஷடி சில்வாவின் ஆலாேசனையைவிட நாலக்க கொடஹேவாவின் ஆலாேசனைக்கே இடமளிக்கப்படுகிறது.

அதனால் தொடர்ந்தும் அந்த கட்சியில் இருந்து கேவலப்படாமல்  மீண்டும் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். நாங்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியை மேலும் பலப்படுத்திக்கொண்டு, நாட்டை கட்டியெழுப்ப வருமாறு  ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவருக்கும்  அழைப்பு விடுக்கிறேன் என்றார்.