வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்து நிகழும் நில அபகரிப்புக்களால் சமூகங்களுக்கு இடையில் பதற்றம்

59 0

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் குமுறைகளுக்கும் முகங்கொடுத்துவருகின்றன. அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்துவருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தினால் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை குறிப்பாக மனித உரிமைகள் அல்லது ஜனநாயக ரீதியிலான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் 32 நாடுகளைப் பட்டியலிட்டிருந்தது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 – ஜுன் 30 வரையான 6 மாதகாலப்பகுதியில் அந்த 32 நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்து வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே பிரிட்டன் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அவ்வறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலைவரம் தொடர்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதை முன்னிறுத்திய பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும், அச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதுடன் கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் ஏனைய சட்டங்களும் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன. அதேபோன்று அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் நினைவுகூரல் நிகழ்வுகள் கடுமையான முறையில் அடக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அதேபோன்று நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் சமூகங்கள் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் கண்காணிப்புக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்துவருகின்றன. அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்துவருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன.

உண்மை மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கான கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதெனினும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் எவையும் 2023 ஜுன் மாதமளவில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நாம் சமர்ப்பித்த அறிக்கையில் யுத்தத்துக்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குக்கும் வழிவகுத்த அடிப்படைக்காரணிகளைக் கண்டறிந்து களைவதற்குரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பன பேணப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.