ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு அதிமுகவில் சீட்

58 0

திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் அவருக்கு நெல்லை தொகுதியில் சீட் வழங்கி அதிமுக அறிவித்துள்ளது.

யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?: திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவரது இயற்பெயர் ஆண்டனி சிம்லா ஷினி. ஆர்சி கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, புனித அந்தோணியார் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன்மூலம் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர்.முதல்வர் ஜெயலலிதா படித்த அதே சர்ச்பார்க் கான்வென்டில் படித்த சிம்லா, பிபிஏ., எல்எல்பி., முடித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா, கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுகவில் பணியாற்றி வந்தார். முதலில் வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணியில் அமைப்பாளராக இருந்தார். பின்னர் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்தார். அப்போது தான், 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டார் சிம்லா முத்துச்சோழன்.

அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். எனினும், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கறிஞராக இருந்த மருதுகணேஷுக்கு திமுக வாய்ப்பளித்தது. இவர் டிடிவி தினகரனிடம் டெபாசிட் இழந்தார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் சிம்லா முத்து சோழனுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாத நிலையில், இம்மாத தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், உறுதியளித்தபடி நடந்துகொள்ளவில்லை. நான் பலமுறை அவருக்கு ஞாபகப்படுத்த முயன்றும் பலனில்லை.

திமுகவில் எனது வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதிமுகவில் சேர்வது என்ற முடிவை எடுத்தேன். மிகவும் மனது உடைந்த நிலையில் தான் இந்த முடிவை எடுத்தேன். தற்போதையை திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார் சிம்லா முத்துசோழன்.

இந்த நிலையில் கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிம்லா முத்துசோழன். நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட சிம்லா முத்துசோழனுக்கு அதிமுக வாய்ப்பளித்துள்ளது. அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி நெல்லை வேட்பாளராக சிம்லா முத்துசோழனை அறிவித்தார்.