பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளபோதும் வங்கிகளில் தொடர்ந்தும் அந்த சட்டத்தின் கீழ் கைத்தொழிலாளர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுகிறன்றன.
அதனால் உடனடியாக அந்த நடவடிக்கையை நிறுத்த குறித்த வங்கிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பராட்டே சட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவை எடுத்த தீர்மானம் நடைமுறையில் செயற்படுத்தப்படுவதில்லை.
வர்த்தக வங்கிகள் அந்த சட்டத்தின் பிரகாரம் இன்றும் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதனால் பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மத்திய வங்கி ஊடாக இந்த வர்த்தக வங்கிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் கடந்த வாரம் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் பராட்டே சட்டத்தின் கீழ் கைத்தொழிலாளர்கள் பலரின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வர்த்தக வங்கிகளே இந்த விளம்பரத்தை பிரசுரித்து வருகின்றன.
மத்திய வங்கியே நாட்டின் வங்கி கட்டமைப்பை கண்காணித்து வருகின்றன. அதனால் மத்திய வங்கி ஊடாக வர்த்தக வங்கிகளுக்கு சுற்று நிருபம் ஒன்றை அனுப்பி, பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் பராட்டே சட்டத்தை தற்காலிகமாக அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு நானும் நன்றி செலுத்தினேன். ஆனால் இன்று அந்த தீர்மானம் பிழையான வழியில் செல்வதாக இருந்தால், அது அரசாங்கத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
மத்திய வங்கிக்கு தங்களின் சம்பளத்தை நூற்றுக்கு 70 வீதம் வரை அதிகரித்துக்கொள்ள முடியுமானால், இந்த நாட்டில் நுண் கடன் பெற்ற கைத்தொழிலாளர்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றனர். அவர்களுக்காக மத்திய வங்கி தனது கடமையை செய்ய வேண்டும்.
எனவே அரசாங்கம் மத்திய வங்கி ஊடாக வர்த்தக வங்கிகளுக்கு கடிதம் அனுப்பி, பராட்டே சட்டத்தின் ஊடாக சாதாரண கைத் தொழிலா்ளர்களின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் குறித்த சட்டத்தில் திருத்தம் செய்து அதனை மேற்கொள்ளும் காலப்பகுதிக்குள் குறித்த வங்கிகள் கைத்தொழிலாளர்களின் சொத்துக்களை விரைவாக ஏலத்தில் விட்டு விடுவார்கள்.
அதனால் அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்துக்கமைய உடனடியாக இந்த சட்டத்தை செயற்படுத்துவதை இடை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.