1,000 பிரபலங்கள் பங்கேற்பு, 2,500 வகை உணவுகள் பரிமாறப்பட்டன: ரூ.1,250 கோடியில் அம்பானி இல்ல திருமண முன்வைபவம்

67 0

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபவம் குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் 1,000 பிரபலங்கள் பங்கேற்றனர். 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. ஒட்டு மொத்தமாக ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதிக்கு இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ், மகள் இஷாஇரட்டையர்கள் ஆவர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி மகன் ஆனந்துக்கும் (28) ராதிகா மெர்ச்சென்டுக்கும் (29) கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கியது. இது முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னின் சொந்த ஊர் ஆகும். இங்கிருந்துதான் அம்பானி குடும்பத்தினர் தங்கள் தொழிலை தொடங்கினர்.

ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் ‘வந்தாரா’ என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.

ரூ.75 கோடியில் இசை கச்சேரி: கடந்த 1-ம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது.

இரண்டாம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மூன்றாம் நாளான நேற்று வந்தாராவனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ரஜினி, அமிதாப் பங்கேற்பு: நடிகர் ரஜினி காந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் நேற்று ஜாம்நகருக்கு சென்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், அலியா பட்,ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப்,இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஜாம்நகரில் குவிந்தது.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

உலக பிரபலங்கள்: அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா உட்பட வெளிநாட்டு பிரபலங்களும் இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்புவிருந்தினர்கள் 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உணவுக்காக மட்டும் ரூ.130 கோடி செலவிடப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

உலகத்தின் கவனம் ஈர்ப்பு: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஒரே மேடையில் நடனமாடியது, முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் அழகிய நடனம், புதுமண தம்பதி ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் நடனம், தோனி, இவாங்கா ட்ரம்பின் தாண்டியா நடனம், ரிஹானாவின் பாடல் என சமூக வலைதளங்கள் முழுவதும் அம்பானி இல்ல திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளன. உள்நாடு, வெளிநாட்டு ஊடகங்களில் அம்பானி இல்ல திருமண வைபவ நிகழ்ச்சிகள் முக்கிய இடத்தைப் பிடித்தன. இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள் ஈர்த்துள்ளன.

ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள்நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செல விடப்பட்டு உள்ளது. திருமண முன்வைபவமே இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள திருமண விழா பிரம்மாண்டத்துக்கே சவால் விடுக்கும் வகையில் இருக்கும் என்று அம்பானி குழும வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.