சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2024! தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

431 0

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக
நடைபெற்ற கரோக்கே ‘கானக்குயில் 2024’ தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ஆறாவது தடவையாக 24.02.2024 சனி அன்று சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

வாழிட நாடுகளின் பன்மொழி, பல்லினப் பண்பாட்டுச் சூழலிலும் தமிழ் இன உணர்வோடும் தாயகப்பற்றோடும் இப்போட்டியிலே பங்குபற்றிய அனைவருக்கும் எமது உளமார்ந்த பாராட்டுகள். பாலர், கீழ், மத்திய, மேல் என நான்கு பிரிவுகளாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் ஆர்வத்தோடு பங்குபற்றிய போட்டியாளர்கள் இசை, தமிழ்மொழி ஆற்றலுடன் பாடலினை உள்வாங்கி உணர்வு, வெளிப்பாட்டோடு பாடியிருந்தார்கள்.

பாலர் மற்றும் கீழ்ப்பிரிவுகளில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் மூவர் தெரிவுசெய்யப்பட்டு இளங்கானக்குயில் 2024 விருதுக்கான இறுதிப்போட்டியும், மத்திய மற்றும் மேல் பிரிவுகளில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் மூவர் தெரிவுசெய்யப்பட்டு கானக்குயில் 2024 விருதுக்கான இறுதிப்போட்டியும் நடாத்தப்பட்டன. இளங்கானக்குயில் 2024 விருதினை செல்வி அபிநயா அவர்களும் கானக்குயில் 2024 விருதினை செல்வி லக்ஷpதா நவஜீவன் அவர்களும் தமதாக்கிக்கொண்டனர்.

பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிப்பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு சிறப்பாகவும், எழுச்சியாகவும் நிறைவுபெற்றது.

இப்போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த அனைத்து வகைகளிலும் முழுமையான ஒத்துழைப்புகளை நல்கிய பெற்றோர்கள், போட்டியாளர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், ஆதரவாளர்கள், தமிழின உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் நிகழ்வு சிறப்புற நிதி ஆதரவு நல்கிய வணிகப்பெருமக்களுக்கும் எமது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.