ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்படாது

79 0

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் மறுசீரமைக்காது. வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டால் வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை செலுத்த நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியில் இன்று (1) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு  விவகாரம் இன்று வரை இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.

கடன் மறுசீரமைப்புக்கு இலங்கையின் பிரதான கடன் வழங்குநரான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கு சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டால் வருடாந்தம் 3 பில்லியன் டொலர் அரச முறை கடன்கள் திருப்பி செலுத்த வேண்டும். வெளிநாட்டு கையிருப்பு 4 பில்லியனாக காணப்படுகின்ற நிலையில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவது சாத்தியமற்றது.

வெளிநாட்டு கடன்களை செலுத்தினால் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் பாதிப்பு ஏற்படும்.

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் மறுசீரமைக்காது.

சர்வதேச நாணய நிதியத்தின் வரி கொள்கையை மாத்திரம் முழுமையாக அமுல்படுத்தும் அரசாங்கம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அவதானம் செலுத்தவில்லை. கடன் பெறுதல், மிகுதியாகியுள்ள வளங்களை விற்பனை செய்தல் என்பன மாத்திரமே ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையாக காணப்படுகிறது என்றார்.