சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மத்திய, தமிழக அரசுகளே காரணம் – சட்டத்தரணி புகழேந்திப்பாண்டியன்

73 0

சாந்தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மத்திய, தமிழக அரசுகளே காரணமாக உள்ளதாக அவரது சட்டத்தரணி புகழேந்திப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

55வயதான தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட சாந்தன் கடந்த 28ஆம் திகதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கல்லீரல் செயலிழப்பால் மரணமடைந்தார். அவரது பூதவுடல் நேற்றையதினம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது சட்டத்தரணியான புகழேந்தி பாண்டியனும் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், சாந்தன் இலங்கை திரும்புவதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அவரது மரணத்துக்கான காரணம் தொடர்பில்   கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை வழங்கப்பாட்டிருந்த சாந்தனுக்கு பின்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக விடுவிக்கப்பட்டார்.

எனினும், அவர் 2022 டிசம்பர் 12ஆம் திகதி திருச்சி திறந்த வெளிச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் அங்கே தங்கவைக்கப்பட்டிருந்தாலும் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் எவ்விதமான சமிக்ஞைகளையும் காண்பிக்கவில்லை.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு அவர் பல கடிதங்களைத் தொடர்ச்சியாக அனுப்பியபோதும் முறையான பதிலளிப்புக்கள் காணப்பட்டிருக்கவில்லை.

இதனால்  அவர் ரிட்வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றில் மேற்கொண்டிருந்தார். இதன்போது, மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து எவ்விதமான அனுமதிகளும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. எனினும், பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்ற உரையாடல்களை அடுத்து அவருக்கு இலங்கை செல்வதற்கான கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. எனினும் தமிழக அரசாங்கத் தரப்பில் தொடர்ச்சியாக அவரை நாடுகடத்துவதற்கான உத்தரவு பிறப்பிட்டது.

எனினும், அந்த உத்தரவும் இந்திய மத்திய மாநில அரசுகளால் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, சாந்தனை நாடுகடத்துமாறு நீதிபதி உத்தரவினை பிறப்பித்துள்ளபோதும், அதனை தமிழகஅரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில் அவர், கடந்த ஜனவரி மாதம் திருச்சி வைத்தியசாலையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காகச் சென்னையில் உள்ள ரஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,

அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்திலும் மீண்டும் நிதிபதியின் உத்தரவு அமுலாக்கம் சம்பந்தமாக நாம் கவனத்துக்கு கொண்டு சென்றபோது சாந்தனை உடனடியாக நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தாமதமின்றி முன்னெடுக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

எனினும், அச்செயற்பாடு தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்கவில்லை. அதேநேரம் கடந்த 22ஆம் திகதி திருச்சி மாவட்ட ஆட்சியாளருக்கு மத்திய அரசாங்கம் சாந்தனை நாடு கடத்துவதற்கான உத்தரவினை அனுப்பியிருந்தபோதும் அவர் கடந்த 27ஆம் திகதி வரையில் வெளிப்படுத்தாது வைத்திருந்தார்.

தகவலறிந்து நாம் அவரைத்தொடர்பு கொண்டபோது தான் அவர் அவ்வாறு மத்திய அரசாங்கத்தின் உத்தரவு கிடைத்ததை உறுதி செய்தார். எனினும், சாந்தன் 28ஆம் திகதி காலையில் இயற்கை எந்தினார்.

அவருடைய மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது. அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு காரணம் இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே என்றார்.