சேலத்தில் பிடிபட்ட அரிய வகை இரண்டு தலை பாம்மை பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வியப்படைந்தனர்.சேலம், இரும்பாலை அருகே உள்ள கீ.பா.ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 28). வக்கீலுக்கு படித்துள்ள இவர் தற்போது சேலத்தில் உள்ள ஒரு வக்கீலிடம் ஜூனியர் வக்கீலாக பயிற்சி பெற்று வருகிறார்.
இன்று காலை சுமார் 6 மணியளவில் இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் நண்பர்களுடன் விளையாடுவதற்காக நடந்து சென்றார்.
அப்போது பிறந்து சில நாட்களே ஆன இரட்டை தலை கொண்ட ஒரு பாம்பு அந்த விவசாய தோட்டத்தில் ஊர்ந்தபடி அங்கும் இங்குமாக நகர்ந்து கொண்டிருந்தது. இது குட்டி பாம்பு என்பதால் வேகமாக சென்று இரையை கவ்வி பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதனை வக்கீல் ரங்கநாதன் பார்த்தார். உடனே அவர் அந்த பாம்பை நண்பர்கள் உதவியுடன் கையால் லாவகமாக பிடித்தார். பின்னர் அதனை சேலம் வன காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் பத்திரமாக அடைத்தார்.
பசி மயக்கத்தாலும், அதிகாலை பனியினாலும் அந்த பாம்பு மிகவும் சோர்வுற்றிருந்தது. பெரும்பாலும் அடர்ந்த காட்டு பகுதிக்குள் தான் இந்த வகை பாம்புகள் வாழும்.
இந்த இரட்டை தலை பாம்பு பொதுமக்களிடம் பிடிப்படுவது மிகவும் அரிது என்பதால் அதனை ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வியப்படைந்தனர். பின்னர் அந்த பாம்பு பொதுமக்கள் உதவியுடன் சேலம் வன காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனை வனத்துறை அதிகாரிகள் காட்டில் கொண்டு விட முடிவு செய்துள்ளனர்.