மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (29) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மௌலவி உட்பட 4 பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே, சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், கடந்த நீதிமன்ற தவணையின்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினர் அளித்த தகவல்களை ஆராய்ந்த நீதிவான், மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களை பெப்ரவரி 29 வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று வழக்கு விசாரணைக்காக சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜரானபோதே மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.