அண்மையில் நடந்து முடிந்த விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, திமுக தரப்பில் உதயசூரியன் சின்னம் வழங்கினாலும் போட்டியிட இசைவளிப்பதாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறியதாக தெரிகிறது. இதற்கு உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் இம்முறை பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் விசிக தலைமை மட்டுமின்றி, உயர்நிலைக்குழு உள்ளிட்ட அனைத்து தரப்பும் உறுதியாக இருப்பது தெரிகிறது. அதேநேரம், 2 தொகுதிகளை மட்டுமே விசிகவுக்கு ஒதுக்க திமுக தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், 3 தொகுதிகளை கட்டாயம் பெற வேண்டும் என்பதில் விசிக திடமாக இருக்கிறது. இதனாலேயே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் விசிகவினர் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, சிதம்பரத்தில் தான் போட்டியிடுவதாக அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துவிட்டார்.
இதேபோல், விழுப்புரத்தில் ரவிக்குமாரும், பொதுத் தொகுதியான கள்ளக்குறிச்சி அல்லது கடலூரில் துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வகையில் திட்டமிட்டு விசிக காய் நகர்த்தி வருகிறது. இதற்கு செக் வைக்கும் விதமாக 4 கட்சிகளுடனான தொகுதி பங்கீடு உடன்படிக்கையை திமுக முடித்துள்ளது. தற்போது விசிகவுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், திமுகவின் கருத்தை விசிக ஏற்குமா அல்லது தனது நிலைப்பாட்டில் கறார் காட்டுமா என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.