இந்த காலம் எத்தனை கொடூரமானது..
30 வருடங்களுக்கு மேல் தான் பெற்ற மகவை காணாது துடித்த தாயை ஆசைக்காட்டி மோசம் செய்யும் அளவுக்கு நியாயமற்றதாகிப் போனது இந்த காலம்.
நாளைய விடியல் என் மகனுடன் என்று எத்தனை கனவு கண்டிருப்பார் அந்த தாய்..
கருணை காட்டாத காலம்
“கட்டியணைத்து கதற வேண்டும், மூன்று தசாப்த துயரங்கள் பகிர வேண்டும், என் மடி மீது தலை சாய்த்து அவன் தூங்க.. நான் தாலாட்டு பாட வேண்டும்..
என் கையால் சமைத்து அருமை பிள்ளைக்கு நான் ஊட்ட வேண்டும், சந்தோஷமாக நான் காண ஒரு பொழுதேனும் நிம்மதியோடு அவன் வாழ வேண்டும்..” என்று எத்தனை எத்தனை சந்தோஷ கனவுகளை அந்த தாய் சுமந்திருப்பார்.
இவை அனைத்தையும் பொய்யாக்கி காலன் சாந்தனை கொண்டுச் சென்றதுதான் எத்தனை துயரம்.
ராஜீவ் காந்தி மரணம்
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழகத்தின் சிறிபெரம்புத்தூர் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில், 1991 ஜூலை 22 ஆம் தேதி சாந்தன் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 26 பேர் வரையில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு இறுதியில் அத்தனைப் பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
காலப்போக்கில் அவர்களுள் 19 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 7 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனினும், அதிக காலம் நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பாயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் நீண்ட காலம் தங்களது நாட்களை சிறையில் கழித்து விட்டதாக தெரிவித்து அவர்களது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இதுவும் கூட பல்வேறு கட்ட போராட்டத்திற்கும், மனுக்களுக்கும், கோரிக்கை கடிதங்களுக்கும், காத்திருப்புக்களுக்கும் மத்தியிலேயே நடந்தது. கட்டம் கட்டமாகவே இவர்களுக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்தும் தங்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பேராட்டங்களை அவர்கள் மேற்கொண்டிருந்த நிலையில், அதுவும் காலப் போக்கில் சாத்தியமானது.
தமிழக அரசின் தீர்மானமும் இழுபறியும்
இந்தநிலையில், 2016 மார்ச் 2ஆம் திகதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 2018 மார்ச் 6ஆம் திகதி 7 பேரை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது.
எனினும், தீர்மானம் எடுப்பதில் ஆளுநர் தரப்பில் இழுபறிகள் காணப்பட்டது.
மேலும் சில வருடங்கள் கழித்து முதலில் பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாந்தன் உள்ளிட்ட ஏனையோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
ஒரு வழியாக மூன்று தசாப்த காலமாக அவர்கள் கேட்ட விடுதலை அவர்களுக்கு கிடைத்தது. விடுதலை காற்றை சுவாசிக்க அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
இருப்பினும் அவர்களில் பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு தற்காலிக பயண ஆவணங்களை வழங்கி, தங்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென கோரிவந்தனர்.
இந்தநிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பல நாட்களாக சாந்தனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
குறிப்பாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடையவே, அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை வைத்தியசாலையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையில் அவரது உடல் நிலை காரணமாக அவர் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இலங்கை வல்வெட்டித் துறையில் உள்ள சாந்தனின் தாயார் தனது மகனை காணாது மூன்று தசாப்தமாக காத்திருந்து போராடி வந்த நிலையில், சாந்தன் விடுதலையான பின்னரும் கூட மகனை காண அந்த வயதான தாயார் மீண்டும் போராட வேண்டியிருந்தது.
கண்ணீருக்கு எங்கிருந்து நியாயம் கற்பிக்கும் பாரத தேசம்
சாந்தனின் உடல்நிலை மோசமடையவே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை வல்வெட்டித்துறையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி தனது மகனை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
“கடந்த 32 ஆண்டுகளாக நான் என் பிள்ளையைப் பார்க்காமல் உள்ளேன். எனது கடைசிக் காலத்தை பிள்ளையுடன் கழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது உயிரைப் பிடித்து வைத்திருக்கின்றேன்.
எனது வலது கண் பார்வை முழுவதும் போய் விட்டது. இடது கண் பார்வையும் போவதற்குள் என் பிள்ளையை நான் பார்த்து விட வேண்டும். என் பிள்ளையை நான் பார்க்காவிட்டால் இனிமேலும் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை” என்று சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தமை பார்ப்போரின் நெஞ்சை பதற வைத்தது.
ஆனால், கோரிக்கைகளும், கண்ணீரும் பிரார்த்தனைகளும் பயனற்றதாகிப் போனது, பாரதம் வஞ்சித்த சாந்தனை காலமும் வஞ்சித்து தன்னோடு கொண்டு சென்று அந்த தாய்க்கு மீண்டும் ஆயுள் தண்டனையை பரிசளித்துச் சென்றுள்ளது.
“நான்கு மாத கால சாந்தனுடைய தவிப்பு தனது தாயை பார்த்து விட வேண்டும் என்பதே. நியாயமாக இதை பார்க்கும் போது இது ஒரு கொலை. சட்டக்கொலை. உடலில் இருந்து உயிர் பிரியும் விடுதலையை நாம் கேட்கவில்லை” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
“சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை” என சட்டத்தரணி ஜொன்சன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சாந்தனின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உடல்நலம் குன்றியிருக்கக் கூடிய சாந்தனை உடனடியாக விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவி சாய்க்க இந்திய அரசு மறுத்துவிட்டது. உச்சநீதிமன்ற ஆணையிட்டபடி உடனே விடுதலை செய்திருந்தால், அவர் தமிழீழம் சென்று தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருப்பார். அவர்களின் அன்பான பராமரிப்பில் உயிர் பிழைத்திருக்கக் கூடும்”. என குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்தத்ததில், இந்திய அரசு கருணை காட்டியிருந்தால், பாரதம் கொஞ்சம் மனிதாபிமானத்தையும் சாந்தனுக்கு காட்டியிருந்தால் சாந்தன் தனது தாயாரின் கையில் ஒரு வாய் உணவு வாங்கி உண்டிருப்பாரில்லையா..
இன்று, தான் பெற்றெடுத்து, ஒரு போராட்டத்திற்காய் அர்ப்பணித்த தன் மகனின் விடுதலைக்காய் தவமிருந்து, பட்டிணிக்கிடந்து, மனம் சோர்ந்து விரைவில் காணப் போகின்றேன் என்ற ஆசையில், தன் மகன் உலக வாழ்க்கையில் இருந்தே நிரந்தர விடுதலைப் பெற்றது தெரியாமல் காத்திருக்கும் அந்த தாயின் மனத்தவிப்பிற்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த பாரதம்…
நாளை மகனின் உயிரற்ற உடலைக் கண்டதும் மாரில் அடித்துக் கொண்டு அழப் போகும் தாயாரின் கதறலுக்கு எந்த சட்டப் புத்தகத்தில் இருந்து இந்த பாரதம் நியாயம் கற்பிக்கப் போகின்றது…