தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு : கட்டாணையை நீடித்து கட்டளை பிறப்பிப்பு

100 0

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரியும், மாநாட்டை தடை செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் (29) மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது கட்டாணையை நீடித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

ஜனநாயகத்தின் சிறந்த பண்பின் ஓர் அங்கமாக இருக்கின்ற கட்சியின் யாப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சியின் யாப்பு என்பது கட்சியின் கட்டமைப்புக்களினாலும், கட்சியின் நிர்வாகிகளினாலும், கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினாலும் பின்பற்றப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்தில் மாற்று கருத்து இல்லை.

நீதிமன்றுக்கு நீதி வேண்டி வருவதற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு இருக்கின்றது. ஆனால் இங்கு வருவதற்கு முன்பு கட்சி மட்டத்தில் தீர்க்க முடிந்த பிரச்சினைகளை அங்கேயே தீர்த்து விடுவதுதான் சிறந்த ஒரு ஜனநாயக பண்பு எனவும் மக்களின் நலன்கருதி இரு தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் யாப்பில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை இந் நீதிமன்றில் இருதரப்பும் இணங்கும் பட்சத்தில்  தமது வழிமொழிகளை சமர்ப்பித்து சட்ட ரீதியாக இணக்கப்பாட்டை எட்ட முடியும் எனவும் குறித்த கட்டாணையானது தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும்  நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது எனவும், இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரியும் கடந்த 15 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாநாட்டை நடாத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றானது கட்டானையொன்றினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.